சர்வதேசமே எமக்கான தீர்வை பெற்றுத்தரவேண்டும்.

சர்வதேசமே எமக்கான தீர்வை பெற்றுத்தரவேண்டும்.

February 9, 2018 0 By Anith

சர்வதேசமே எமக்கான தீர்வை பெற்றுத்தரவேண்டும்.என காணமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தின் தலைவி கி. ஜெயவனிதாதெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கு தேடியும் இல்லை என தெரிவித்த ஜனாதிபதியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று(09) உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் கடந்த 351ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்று ஒரு வருடமாகியுள்ள நிலையில் தேர்தலுக்காக வடக்கிற்கு வந்த ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டடோர் எங்கு தேடியும் இல்லை என தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வவுனியா கந்தசாமி கோவிலுக்கு முன்பாக 108 தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடத்திற்கு சென்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இரண்டு நாட்களுக்கு உணவு தவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காணமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தின் தலைவி கி. ஜெயவனிதா கருத்து தெரிவிக்கையில்…..

ஜனாதிபதி வாக்கு பிச்சை கேட்பதற்காக வடக்கிற்கு வந்து எமது போராட்டத்திற்கு உரிய பதிலை அளிக்காது எதிரான கருத்தை தெரிவித்து சென்றுள்ளார்.

அவருடன் இடம்பெற்ற பேச்சுக்களில் சுமந்திரன் உட்பட 3 மக்கள் பிரதிநிதிகள் வருகை தந்து எமது பேச்சுக்களை குழப்பியிருந்தனா்.

இந்நிலையில் பிரதமரும் பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணம் வந்து மரணச்செய்தியை தந்துவிட்டு சென்றுள்ளார்.

எமது போராட்டத்திற்கு உரிய பதிலை வழங்காத நிலையில் இவர்களினை நம்பி பயன் இல்லை எனவே சர்வதேசமே எமக்கான தீர்வை பெற்றுத்தரவேண்டும்.

அத்துடன் ஒரு வருடமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எம்மைப்பற்றி கரிசனை கொள்ளாது இடம்பெறும் தேர்தலில் எமது மக்கள் வாக்களிக்க செல்லக்கூடாது.

அவ்வாறு சென்றால் மக்களும் எமக்கு துரோகம் செய்தவர்களாவர் என அவர் தெரிவித்தார்.