இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்பு

இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்பு

April 3, 2018 0 By Anith

தேசிய அரசியலில் பெரும் பரப்பரப்புக்குள்ளாகியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை புதன்கிழமை விவாதத்திற்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதன்படி நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை இரவு 9.30 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

இதன்படி நாளை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளதுடன் சபையின் தினப்பணிகள் நிறைவடைந்த பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணை 12 மணிநேரம் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பின்னர் அரசியல் ரீதியாக பெருமளவில் சிக்கலான நிலைமை ஏற்பட்டது. இதன்படி ஆரம்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதன்படி கட்சிக்குள் மறுசீரமைப்பு பணிகளை துரிதமான முன்னெடுக்க வேண்டும் என கூறப்பட்டது.

இவ்வாறு இருக்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு எதிர்க்கட்சி கொண்டு வந்தது. குறித்த பிரேரணையை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் 55 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கையளிக்கப்பட்டது.

இதன்பிரகாரம் கூட்டு எதிர்க்கட்சியின் 52 உறுப்பினர்களும் சுதந்திரக் கட்சி சார்பாக இராஜாங்க அமைச்சர் ரி.பி ஏக்கநாயக்க, பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோரும் கையொப்பமிட்டிருந்தனர். எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்த பிரேரணையில் கைச்சாத்திடவில்லை.

தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பெரும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. இதன்படி பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது. அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் பலமட்ட சந்திப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதற்கு அப்பால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலும் பல்வேறு மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

அதேபோன்று கூட்டு எதிர்க்கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு சிலருடனும் சுதந்திரக் கட்சியுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் பல்வேறு மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வாக்களிக்க போவதாக சுதந்திரக் கட்சியின் ஒருசிலரும் மக்கள் விடுதலை முன்னணியினர் அறிவித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமருக்கு ஆதரவு வெளியிடும் என கட்சி வட்டார தகவல்கள் தெரிவித்தாலும் உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எவ்வாறாயினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை புதன்கிழமை விவாதத்திற்கு எடுக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதன்படி நாளை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடி வாய்மூல வினாக்களுக்கான விடை உட்பட தினப்பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணையின் மீதான விவாதம் நடத்தப்படும். அதன்பின்னர் இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன்போது தனிநபர் பெயர் அழைத்து வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.